திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் உள்ளிட்ட சில கோவில்களில் அறப்பணி மேற்கொள்ள உருவாக்கப்பட்ட அறக்கட்டளைக்கு சொந்தமான நிலம் தொடர்பாக, எந்த ஆவணத்தையும் பதிவு செய்யக் கூடாது என்ற இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீட்டித்துள்ளது.

மதுரை மாவட்டம் நெடுங்குளத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், ஸ்ரீரங்கம் திம்மராயசமுத்திரத்தில் உள்ள 21 ஏக்கர் 6 சென்ட் நிலம் அந்த அறக்கட்டளைக்கு சொந்தமானது என்றும், சுமார் ரூ.600 கோடி மதிப்புள்ள சொத்தை சிலர் அபகரிக்க முயல்வதாகவும் கூறப்பட்டிருந்தது.

இதற்கு முன் செப். 3 அன்று இரு நீதிபதிகள் அமர்வு, முழு நிலம் அல்லது அதன் ஒரு பகுதி தொடர்பாகவும், மறு உத்தரவு வரும் வரை சம்பந்தப்பட்ட சார்-பதிவாளர் எந்த பதிவையும் மேற்கொள்ளக் கூடாது என்று உத்தரவிட்டு இடைக்கால தடை விதித்திருந்தது. அந்த தடையை விலக்கக் கோரி சென்னை ரங்கசாமி, சித்ரா, வாசுதேவானந்த் ரங்கசாமி தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வு, இது சிவில் பிரச்னை போல இருப்பதாகவும், இதை பொதுநல வழக்காக எப்படி கருத முடியும் என்றும் கேள்வி எழுப்பியது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அறக்கட்டளை நிலத்தை அறப்பணிக்காக மட்டுமே பயன்படுத்த முடியும்; விற்பனை செய்ய முடியாது என்றும், ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்டதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தார். ரங்கசாமி உள்ளிட்டோர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராமன், அவர்கள் சொத்தின் உரிமையாளர்கள் என்றும், மனுதாரர் கூறும் வகையில் முழுமையாக கோவிலுக்கு தானமாக வழங்கப்படவில்லை; ஆனால் வருவாயை திருப்பணிக்கு பயன்படுத்தலாம் என்றும் வாதிட்டார்.

அறநிலையத்துறை கமிஷனர், இணை கமிஷனர், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவில் செயல் அலுவலர், பதிவுத்துறை ஐ.ஜி. ஆகியோர் இரண்டு வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பின்னர் மனுதாரர் தரப்பும் பதில் மனு தாக்கல் செய்யலாம் என்றும் கூறி, வழக்கை நவம்பர் 5க்கு ஒத்திவைத்து, அதுவரை இடைக்கால தடையை நீட்டித்தது.