மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற உள்ள கும்பாபிஷேகத்தில் அரசியல் இல்லை என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்தார். கும்பாபிஷேகத்தில் அரசியல் செய்யப்படுவதாக அறங்காவலர் குழுவினர் முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்தார்.

அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் கும்பாபிஷேக ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். ஏற்பாடுகள் முழுமையாக நிறைவடைந்துள்ளன என்றும், பல துறையினர் இரண்டு ஷிப்ட்களாக பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் கூறினார். மின்தடை ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன; ஏதேனும் தடை ஏற்பட்டால் இரண்டு நிமிடங்களில் மின்சாரம் வழங்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கோவில் மேல்தளத்தில் பொதுமக்கள் 2,000 பேரை அனுமதிக்க குலுக்கல் முறையில் தேர்வு செய்து ‘பாஸ்’ வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். ‘பாஸ்’ விஷயத்தில் அரசு தலையீடு இல்லை என்றும், தானே அதை இதுவரை பார்த்ததில்லை என்றும் அவர் விளக்கினார்.

கும்பாபிஷேக ஏற்பாடுகள் கோவில் நிர்வாகத்தின் பொறுப்பு; அதில் யாரும் தலையிட முடியாது என அமைச்சர் தெரிவித்தார். அறங்காவலர்களை தொடர்பு கொண்டு அவர்களின் குறைகளை கேட்டறிந்து தேவைகளை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.

இதற்கிடையில், தமிழ் ஓதுவார்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் கருவறைக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் குற்றம்சாட்டி, சேலம் சத்தியபாமா தலைமையில் தமிழ் ஓதுவார்கள் அம்மன் சன்னதி முன் சித்திரை வீதியில் தர்ணாவில் ஈடுபட்டனர். அமைச்சர் நிர்மல்குமார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் அமைச்சர் ரமேஷ், அரசு அங்கீகரித்த 27 தமிழ் ஓதுவார்கள் செப். 11 முதல் கோவிலில் இருப்பதாகவும், யாக பூஜைகள் நடத்தவும் கருவறை செல்லவும் கலசத்தில் நீர் ஊற்றும் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்கவும் அனுமதி உண்டு என்றும், தமிழுக்கு முன்னுரிமை தொடரும் என்றும் தெரிவித்தார்.