மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் இன்று மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெறுகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் பாதுகாப்பு மற்றும் கூட்ட மேலாண்மை ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

இன்று காலை 7:40 மணி முதல் 8:10 மணிக்குள் முக்கிய கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதை தரிசிக்க கோவில் மேல் தளத்தில் 9,000 பேருக்கு அனுமதி வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுத் தரிசனத்திற்கு பக்தர்கள் காலை 10:00 மணிக்குப் பிறகு அனுமதிக்கப்பட உள்ளனர்.

நேற்று கோவிலின் பரிவார மூர்த்திகள் உள்ளிட்ட இதர சன்னிதிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இன்று அதிகாலை 12வது கால யாகசாலை பூஜைக்குப் பின் புனித நீர் புறப்பாடு நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 7:40 மணிக்கு அம்மன், சுவாமி தங்க விமானங்கள் மற்றும் ராஜகோபுரங்களுக்கு, 7:55 மணிக்கு அம்மன் சன்னிதிக்கு, 8:10 மணிக்கு சுவாமி சன்னிதிக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் தலைமையில் 6,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் இன்று இரவு 10:00 மணி வரை போக்குவரத்து மாற்றங்கள் அமலில் உள்ளன; கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை, ஆவணி, மாசி வீதிகளில் வாகனங்கள் செல்லவும் நிறுத்தவும் அனுமதி இல்லை. மேலும் நகருக்குள் சரக்கு மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கோவிலைச் சுற்றியுள்ள ஆபத்தான நிலையில் உள்ள 37 பழமையான கட்டடங்களை மாநகராட்சி கண்டறிந்து, அவற்றை ஒரு வாரத்திற்குள் இடித்து அகற்ற நோட்டீஸ் ஒட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.