திமுகவும் அதிமுகவும் நீண்ட காலமாக “கள்ள உறவு” வைத்துக்கொண்டு தமிழக மக்களை ஏமாற்றினதாக அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் அருண்ராஜ் குற்றம்சாட்டினர். தாராபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர்கள் இந்த கருத்துகளை தெரிவித்தனர்.
கடந்த 60 ஆண்டுகளில் ஊழலற்ற ஆட்சியை நடத்த முடியும் என பலர் நம்பவில்லை என்றும், ஆனால் அதை செய்து காட்டும் வகையில் தவெக ஆட்சி செயல்படுகிறது என்றும் அமைச்சர்கள் கூறினர். தமிழகத்தில் முதல் முறையாக மக்கள் மையமாகக் கொண்ட ஆட்சி நடைபெறுகிறது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
அடுத்த தலைமுறையை கருத்தில் கொண்டு நீண்டகால திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தனர். சட்டசபை பொதுத்தேர்தலில் தவெக குறித்து மக்களிடம் இருந்த சிறிய சந்தேகத்தால் சிலர் வாக்களிக்கவில்லை என்றும், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தலில் வரலாறு காணாத பெரிய வெற்றி கிடைக்கும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
மேலும், திமுகவும் அதிமுகவும் வெளிப்படையாக ஒருவருக்கொருவர் எதிராக அரசியல் செய்தாலும், மாறிமாறி ஆட்சி செய்த இரு கட்சிகளும் உண்மையில் மக்களை ஏமாற்றியதாக அவர்கள் கூறினர். தமிழக மக்கள் உண்மையான மாற்றத்தை எதிர்பார்த்த நிலையில், இரு கட்சிகளும் கள்ள உறவு வைத்து செயல்பட்டதாக அமைச்சர்கள் குற்றம்சாட்டினர்.
இடைத்தேர்தலில் மக்களின் ஆதரவைப் பெற்று மக்கள் நலன் மற்றும் நீண்டகால வளர்ச்சி திட்டங்களை முன்னெடுக்கத் தொடர்ந்து செயல்படுவோம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.





