இந்தியா மீது உலக நாடுகளின் நம்பிக்கை அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நாட்டின் பொருளாதார வளர்ச்சியும், சமீபத்திய உட்கட்டமைப்பு முன்னேற்றங்களும் இதற்கு காரணம் என அவர் கூறினார்.
டெல்லி யசோபூமி கருத்தரங்கு மையத்தில் நடைபெற்ற செமிகான் மாநாட்டைத் தொடங்கி வைத்து பேசிய அவர், கடந்த 15 நாட்களை எடுத்துக் கொண்டாலே இந்தியா எந்த திசையில் செல்கிறது, எவ்வளவு வேகத்தில் முன்னேறுகிறது என்பதற்கான தெளிவான படம் கிடைக்கும் என்றார்.
சரக்கு ரயிலுக்காக பிரத்யேகமாக அமைக்கப்பட்ட 3,000 கிலோமீட்டர் பாதை பயன்பாட்டுக்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், இது நாடு முழுவதும் வேகத்தை துரிதப்படுத்தி, தளவாடங்களை மேம்படுத்தி, உற்பத்தித் துறைக்கு புதிய பலம் தரும் என்றார்.
இந்தியாவில் நடைபெறும் ஐந்தாவது செமிகான் மாநாடு இதுவென கூறிய பிரதமர், பங்கேற்பாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்; வெளிநாட்டில் இருந்து வந்த விருந்தினர்களுக்கும் சிறப்பு வணக்கம் தெரிவித்தார். விஸ்வகர்மா ஜெயந்தியை முன்னிட்டு மக்களுக்கு வாழ்த்து கூறிய அவர், ‘பிரதமர் விஸ்வகர்மா’ திட்டம் தொடங்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
பல நூற்றாண்டு பாரம்பரிய கட்டுமான மரபும், 21ஆம் நூற்றாண்டின் தொழில்நுட்பம் மற்றும் கொள்கைகளும் இணைந்து, தன்னிறைவு மற்றும் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்குக்கு ஊக்கமாக இருப்பதாக அவர் கூறினார்.





