கோல்கட்டா: பெண்கள் வாழ்க்கை முழுவதும் சந்திக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதே பாஜவின் தலையாய முன்னுரிமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பேசிய அவர், மே 4 அன்று மாநிலம் “புதிய மாற்றத்தை” தேர்வு செய்ததாகவும், அதில் தாய்மார்களும் சகோதரிகளும் முக்கிய பங்காற்றியதாகவும் கூறினார். பெண்கள் பல இன்னல்களை எதிர்கொண்டதாகவும், பல விஷயங்களுக்கு நீண்ட நாட்கள் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“பேச்சு குறைவு, செயல் அதிகம்” என்ற கொள்கையுடன் அரசு செயல்படுவதாக கூறிய மோடி, மாநிலத்தில் ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே பல திட்டங்கள் தொடங்கப்பட்டதாக தெரிவித்தார்.
பல பெண்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக பணம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், அதில் பணம் குறைக்கப்படவில்லை என்றும், இடைத்தரகர்கள் இல்லை என்றும் அவர் கூறினார். மேற்கு வங்கத்தில் இனி பணத்தை “குறைக்கும்” நடைமுறை நடக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தாய்மார்களுக்கும் மக்களுக்கும் அதிகாரம் அளிப்பதை நோக்கமாகக் கொண்டு மத்திய அரசு பல முன்னெடுப்புகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறினார்.





