புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் வாழ்த்துச் செய்தி அனுப்பியுள்ளார்.
அந்த செய்தியில், இந்திய மக்களிடையே மோடி பெற்றுள்ள மரியாதையையும், உலக அரங்கில் அவர் பெற்றுள்ள குறிப்பிடத்தக்க செல்வாக்கையும் புடின் குறிப்பிட்டார். இந்தியா–ரஷ்யா உறவை வலுப்படுத்துவதில் மோடியின் தனிப்பட்ட பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், கடந்த வாரம் டில்லிக்கு மேற்கொண்ட தனது பயணத்தின் போது தன்னுக்கும் ரஷ்யக் குழுவினருக்கும் வழங்கப்பட்ட அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நன்றி தெரிவித்தார்.
இருதரப்பு பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாகவும் பயனுள்ளதாகவும் அமைந்ததாக கூறிய புடின், மோடியுடன் உரையாடியது மகிழ்ச்சியளித்ததாகவும், அந்த கலந்துரையாடல்கள் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை மீண்டும் வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இரு நட்பு நாடுகளின் நலனுக்காக, முக்கியமான இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களில் ஆக்கபூர்வமான ஒத்துழைப்பை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்றும் புடின் கூறினார்.





