நாட்டிலுள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவியருக்கான மாதவிடாய் சுகாதார வசதிகள் தொடர்பாக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தாக்கல் செய்துள்ள அறிக்கைகள் திருப்திகரமல்ல என்றும், அவை களநிலவரத்தை பிரதிபலிக்காமல் ‘ஆம்/இல்லை’ படிவம் நிரப்புவது போல இயந்திரத்தனமாக உள்ளன என்றும் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இலவசமாக சானிட்டரி நாப்கின் வழங்குதல், மாணவியருக்கு தனி கழிப்பறை வசதி, மாதவிடாய் சுகாதார மேலாண்மை ஆகியவற்றை உறுதி செய்வது தொடர்பான ஜெயா தாகூர் வழக்கை நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. முந்தைய உத்தரவுகள் எவ்வாறு அமல்படுத்தப்பட்டுள்ளன என்பதையும் நீதிமன்றம் ஆய்வு செய்தது.
அறிக்கைகளில் அதிகாரிகளின் சுய சிந்தனையோ அக்கறையோ வெளிப்படவில்லை எனக் குறிப்பிட்ட நீதிமன்றம், அடுத்த கட்ட முன்னேற்ற அறிக்கையில் சாதனைகளை பட்டியலிடுவதைக் குறைத்து, களத்தில் உள்ள குறைபாடுகளைத் தெளிவாக சுட்டிக்காட்ட வேண்டும் என்று உத்தரவிட்டது.
தண்ணீர் வசதியுடன் கூடிய தனி கழிப்பறை இல்லாத பள்ளிகள் எத்தனை, அந்த வசதிகள் இல்லாததற்கான உண்மையான காரணங்கள் என்ன, குறைபாடுகளை நிரப்புவதற்கான காலக்கெடு என்ன என்பவற்றைத் தெளிவாக அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டது. உத்தரவுகள் காகிதத்தில் மட்டும் நிற்காமல் களத்தில் அமலாக, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் ஆசிரியர் குழுக்களை அமைத்து நகரம்-கிராமம் என அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் திடீர் ஆய்வுகள் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
இந்த ஆய்வு அறிக்கையில் மாணவியரிடமிருந்து பெறப்படும் நேரடி கருத்துகளும் இடம்பெற வேண்டும். மேலும், அவசர தேவைகளுக்காக மாற்று ஆடைகள், உள்ளாடைகள், சானிட்டரி நாப்கின்கள் உள்ளிட்டவை அடங்கிய பிரத்யேக வசதியை அனைத்து பள்ளிகளிலும் உடனடியாக ஏற்படுத்த வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கின் அடுத்த விசாரணையை செப்டம்பர் 29க்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.





