புதுடில்லி: தமிழகத்தில் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா (நவோதயா) பள்ளிகளை அமைப்பதை தமிழக அரசு தடுக்க நினைக்கிறதா என சுப்ரீம்கோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த விவகாரம் நீதிபதி பி.வி. நாகரத்னா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா வாதாடி, தமிழகத்தில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க உத்தரவு பிறப்பிக்கக் கூடாது என்றும், மாநிலத்தில் போதுமான அரசு பள்ளிகள் உள்ளன என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தில் ஹிந்தி கற்க தடையில்லை என்றாலும், ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி கல்விக் கொள்கை இருப்பதாகவும், நவோதயா பள்ளி முறை மாநிலக் கல்விக் கொள்கைக்கு எதிரானதாகவும் அவர் வாதிட்டார். இது ஹிந்தி திணிப்பு மட்டுமல்ல; நிதி சார்ந்த பிரச்னைகளும் உள்ளன என்றும், மத்திய அரசு 5,000 கோடி ரூபாய்க்கும் மேலாக வழங்க வேண்டியிருக்கும் என்றும் கூறினார்.

இதற்கு பதிலளித்த நீதிபதிகள், நவோதயா பள்ளிகளை வரவிடாமல் தடுப்பதா என்ற மனநிலையை தமிழக அரசு மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், “தமிழகத்தின் மண்ணில் ஹிந்தி கற்பிக்கப்படாது” என்ற கடுமையான நிலைப்பாடு இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்டனர். மொழிக் கொள்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துமாறும், நவோதயா பள்ளிகள் அமைக்கும் திட்டம் மாநிலக் கொள்கைக்கு எதிரானது அல்ல என்றும் தெரிவித்தனர்.

மேலும், நவோதயா பள்ளிகளுக்கான நிலங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் கண்டறிய 3 மாத கால அவகாசம் வழங்கி, ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை பின்பற்ற வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. அரசு மாறியிருப்பதால் மனநிலையிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறிய அமர்வு, எதிர்ப்பு ஹிந்தி திணிப்பு காரணம்தானா என கேள்வி எழுப்பி, மத்திய அரசுடன் உட்கார்ந்து பேசி முடிவுக்கு வருமாறு தமிழக அரசை அறிவுறுத்தியது.