சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்குச் சொந்தமான நிலம் தொடர்பான உரிமை மேல்முறையீட்டு விவகாரத்தில், இரு தரப்பும் சமரசப் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதியை மத்தியஸ்தராக நியமிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வழக்கு விவரங்களின்படி, 1988-ல் சம்பந்த முதலியார் குடும்பத்தினரிடமிருந்து ஈசிஆரில் உள்ள சுமார் 2.7 ஏக்கர் நிலத்தை ஸ்ரீதேவி விலைக்கு வாங்கியதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் சுமார் 37 ஆண்டுகளாக அந்தச் சொத்தை ஸ்ரீதேவியின் குடும்பத்தினர் அனுபவித்து வந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், சம்பந்த முதலியாரின் மகன் சந்திரசேகரனின் வாரிசுகள் என கூறப்படும் எம்.சி. நடராஜன் மற்றும் எம்.சி. சிவகாமி ஆகியோர், செங்கல்பட்டு கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்து உரிமை கோரினர்.

அந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய போனி கபூர், ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். ஆனால், சொத்து உரிமை குறித்து முழுமையான விசாரணைக்குப் பிறகே முடிவு செய்ய முடியும் எனக் கூறி செங்கல்பட்டு நீதிமன்றம் அந்த மனுவை நிராகரித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த கபூர் குடும்பத்தினர், போலி வாரிசுச் சான்றிதழ் மூலம் சொத்தை அபகரிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டதாக வாதிட்டனர். இதை ஏற்ற உயர் நீதிமன்றம், செங்கல்பட்டு நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து, சிவகாமி மற்றும் நடராஜன் தொடர்ந்த வழக்கைத் தள்ளுபடி செய்தது.

இந்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர். நீதிபதிகள் கே.வி. விஸ்வநாதன் மற்றும் அருண் பள்ளி அமர்வு முன் நடந்த வாதங்களில், மனுதாரர்கள் தரப்பு தங்களின் தந்தைக்கு சொத்தில் ஐந்தில் ஒரு பங்கு உரிமை இருந்ததாகவும், அவருக்கு தெரியாமல் சகோதர, சகோதரிகள் நிலத்தை முறைகேடாக விற்றதாகவும் கூறி விற்பனை ஆவணங்களை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதற்கு கபூர் குடும்பத்தினர் தரப்பு, 1988-ல் வாங்கப்பட்ட நிலத்திற்கு 2025-ல் தான் உரிமை கோரி வழக்கு தொடரப்பட்டதாகவும், மனுதாரர்களின் தந்தை உயிருடன் இருந்த காலத்திலும் வழக்கு இல்லை என்றும் கூறி, தற்போதைய வழக்கு சொத்தை அபகரிக்கும் நோக்கிலேயே என வாதிட்டது. மேலும், மனுதாரர்களின் வாரிசுத் தகுதி, பழைய சர்வே எண் உள்ளிட்ட அம்சங்களையும் சுட்டிக்காட்டினர். இருப்பினும், நீதிபதிகள் இரு தரப்பும் சமரசமாக தீர்வு காண முயல வேண்டும் என அறிவுறுத்தி, மத்தியஸ்தம் நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்தனர். சமரசம் எட்டப்படாவிட்டால் பதிலளிக்க நோட்டீஸ் வழங்கப்படும் எனக் கூறி, விசாரணையை டிசம்பர் 18-க்கு ஒத்திவைத்தனர்.