தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த, 12 ஒருங்கிணைப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத் துறை தகவலின்படி, டெங்கு பாதிப்பு சில மாவட்டங்களில் அதிகமாக உள்ளது. குறிப்பாக சென்னை, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 16,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், தினசரி சுமார் 100 பேர் அளவில் புதிய பாதிப்புகள் பதிவாகி வருவதாகவும், 9 பேர் வரை உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் கூறுகையில், டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுக்கள் மட்டுமின்றி அவற்றின் புழுக்களையும் கண்டறிந்து அழிக்கும் பணிக்காக 25,158 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொசு ஒழிப்பு பணிகளுடன் சேர்த்து, காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த பணிகளை கண்காணித்து ஒருங்கிணைக்க, பொது சுகாதாரத் துறையின் கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள், துணை இயக்குநர்கள் ஆகியோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். 45 சுகாதார மாவட்டங்களை அடிப்படையாகக் கொண்டு 12 ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஒவ்வொரு அதிகாரியும் சராசரியாக 3 அல்லது 4 சுகாதார மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் மருத்துவக் குழுக்களுடன் இணைந்து தடுப்பு பணிகளை முன்னெடுப்பார் என கூறப்பட்டுள்ளது.