திருப்பூர் நஞ்சப்பா மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் அறைக்குள் புகுந்த பிளஸ் 2 மாணவர்கள் தாக்கியதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிடைத்த தகவலின்படி, தலைமையாசிரியர் கர்னல் (54) நேற்று தனது அறையில் இருந்தபோது, தொடர்ந்து பள்ளிக்கு வராமல் நேரடியாக தேர்வுக்கு வந்த மாணவர்களிடம் வருகை குறித்துக் கேள்வி எழுப்பினார். அந்த நேரத்தில், பிளஸ் 2 மாணவர்கள் ஏழு பேர் திடீரென அறைக்குள் நுழைந்து அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சத்தம் கேட்டு அருகிலிருந்த வகுப்பறையிலிருந்து ஒரு ஆசிரியர் ஓடி வந்ததும் மாணவர்கள் அங்கிருந்து தப்பியோடியதாக கூறப்படுகிறது. காயமடைந்த தலைமையாசிரியரை மீட்டு கல்லம்பாளையம் மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது. முகத்தில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததால் உடை ரத்தத்தில் நனைந்திருந்ததாகவும் தகவல்.

பின்னர் போலீசார் பள்ளிக்கு வந்து தலைமையாசிரியரிடம் விசாரணை நடத்தினர். மேலும் சில பிளஸ் 2 மாணவர்களை அழைத்து தனித்தனியாக விசாரித்ததாக கூறப்படுகிறது. சி.சி.டி.வி கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

முதன்மை கல்வி அலுவலர் புனிதா அந்தோணியம்மாள், இது மோசமான நடத்தை என்றும், மாவட்ட நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். தவறு செய்தவர்கள் மீது தயக்கமின்றி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.