சென்னை: பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை கூட்டணி கட்சிகள் வெளிப்படையாக ஏற்க வேண்டுமா என்ற விவகாரத்தில், தமிழக காங்கிரசில் புதிய கருத்து மோதல் உருவாகியுள்ளது.
முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் தான் பிரதமர் வேட்பாளர் என்பதை கூட்டணி கட்சிகள் ஏற்க வேண்டும் என்றும், அது இல்லையெனில் கூட்டணியில் இருப்பதற்கான அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார். ராகுலை நேர்மையாக, வெளிப்படையாக ஏற்கும் கட்சிகளோடு மட்டுமே கூட்டணி வைப்பதே சரி எனவும் அவர் கூறினார்.
இந்த பின்னணியில், 2029 லோக்சபா தேர்தலை முன்னிட்டு த.வெ.க. தரப்பில் முதல்வர் விஜயை பிரதமர் வேட்பாளராக முன்வைக்கும் பேச்சுகள் தொடர்கின்றன. த.வெ.க. அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், “ராகுல் தான் பிரதமர் வேட்பாளர்” என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக, த.வெ.க. ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என அமைச்சர் ராஜேஷ்குமார் தெரிவித்திருந்தார். பின்னர் இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமாகியதாக கூறப்படுகிறது.
செல்வப்பெருந்தகையின் கருத்துக்கு பதிலளித்த காங்கிரஸ் ராஜ்யசபா எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி, கூட்டணி குறித்து பேச செல்வப்பெருந்தகைக்கு என்ன அதிகாரம் என கேள்வி எழுப்பினார். முதல்வர் விஜய் தலைமையில் உருவான “மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றிக் கூட்டணி”யில் எந்த குழப்பமும் இல்லை என்றும், தமிழகத்தில் ஆட்சி-அதிகாரத்தில் காங்கிரஸ் பங்கு பெற்றுள்ளதாகவும், கட்சிக்கு மதிப்பு மற்றும் அரசியல் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். இந்த பரஸ்பர பதிலடிகள் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.





