தமிழக அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் தரமற்ற உதிரிப்பாகங்கள் பயன்படுத்தப்படுவதால் பராமரிப்பு தரம் பாதிக்கப்பட்டு, பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது என தொழிற்சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.

கடந்த ஆண்டு திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பஸில் முன்பக்க டயர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 7 பேர் உயிரிழந்ததாக அவர்கள் நினைவூட்டினர். அந்த சம்பவத்திற்குப் பிறகும் போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும், அதனைத் தொடர்ந்து 6 மாதங்களில் நூற்றுக்கணக்கான அரசு பஸ்கள் டயர் வெடிப்பு காரணமாக விபத்தில் சிக்கியதாகவும் தெரிவித்தனர்.

சமீபத்தில் குமுளி–நாகர்கோவில் அரசு பஸில் முன்பக்க டயர் வெடித்து வண்டி கட்டுப்பாட்டை இழந்த நிலையில், ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பயணிகள் உயிர்தப்பியதாகவும் கூறப்பட்டது. அரசு போக்குவரத்துக் கழகங்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன; தினமும் சுமார் 2.03 கோடி பேர் பயணம் செய்கிற நிலையில், தொடரும் விபத்துகள் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தன.

தொடர் விபத்துகளால் அரசு போக்குவரத்துக் கழகத்தின் மீது மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதாகவும், உதிரிப்பாகங்களின் தரத்தை உறுதி செய்யாமல் கொள்முதல் செய்வதால் அரசுக்கு கூடுதல் செலவும் ஏற்படுகிறது என்றும் அவர்கள் கூறினர். இருப்பில் உள்ள உதிரிப்பாகங்களை முழுமையாக ஆய்வு செய்து தரமற்றவற்றை அகற்ற வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் கடந்த 5 ஆண்டுகளில் உதிரிப்பாக கொள்முதலில் முறைகேடுகள் நடந்துள்ளதா என்பதை அரசு விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், பஸ்களின் பாதுகாப்பில் எந்த சமரசமும் இன்றி தரத்தை உறுதி செய்யும் கண்காணிப்பு முறையை வலுப்படுத்த வேண்டும் என்றும் தொழிற்சங்கங்கள் கோரிக்கை வைத்தன.