வாஷிங்டன்: சட்டவிரோத போதைப்பொருள் உற்பத்தி மற்றும் கடத்தல் நடைபெறும் நாடுகள் குறித்த புதிய பட்டியலை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ளார். இதில் இந்தியா, பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் சேர்த்து மொத்தம் 23 நாடுகள் இடம்பெற்றுள்ளன.
அதிபர் வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், சட்டவிரோத அபின் சாகுபடியைத் தடுக்கவும், விற்பனை செய்பவர்களை முடக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் பிரதமர் நரேந்திர மோடியும் இந்திய அரசும் மேற்கொண்டு வரும் “ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை” வரவேற்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
மேலும், “இந்தியா–அமெரிக்க போதைப்பொருள் தடுப்புக் கொள்கை கட்டமைப்பு” வழியாக இந்தியாவுடன் இணைந்து தொடர்ந்து செயல்பட ஆவலுடன் இருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான், பஹாமாஸ், பெலிஸ், பொலிவியா, மியான்மர், கொலம்பியா, மெக்சிகோ உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. பட்டியலில் இடம்பெறுவது மட்டும் அந்த நாடுகள் போதைப்பொருளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என்பதல்ல என அமெரிக்கா தெளிவுபடுத்தியுள்ளது.
அதே நேரத்தில், சர்வதேச போதைப்பொருள் தடுப்பு ஒப்பந்தங்களை மதிக்காமல் “முற்றிலும் தோல்வியடைந்த” நாடுகளாக ஆப்கானிஸ்தான், பொலிவியா, மியான்மர் மற்றும் கொலம்பியா ஆகிய 4 நாடுகளை அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.





