அக். 6-ம் தேதி நடைபெற உள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக, திமுக, அதிமுக, நாதக, கம்யூ. கட்சிகள் என ஐந்து முனை போட்டி உருவாகியுள்ளது. வாக்குகள் பிளவுபடும் சூழலில், குறைந்த வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

மதுராந்தகம் தொகுதியில் கடந்த சட்டசபை தேர்தலில் பாமக ஆதரவுடன் அதிமுக வெற்றி பெற்றதாக கூறப்படுகிறது. இத்தொகுதியில் வன்னியர் சமுதாய வாக்குகள் கணிசமாக உள்ளதால், பாமக ஆதரவை பெறும் தரப்புக்கே வெற்றி வாய்ப்பு அதிகம் என்ற மதிப்பீடும் நிலவுகிறது.

இந்த பின்னணியில் பாமகவை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியை தவெக தலைமையகம் தொடங்கியதாக தகவல். ஆனால் பாமக தரப்பு தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தாமல் இருப்பதாகவும், தவெக கூட்டணியில் உள்ள விசிக இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

அதே நேரத்தில், பாமக ஆதரவை மீண்டும் பெற அதிமுக தரப்பிலும் பேச்சுவார்த்தை நடப்பதாக கூறப்படுகிறது. இதற்கும் பாமக தலைமையகம் பதில் தராமல் அமைதி காக்கிறது.

இந்நிலையில், பாமக இடைத்தேர்தலை புறக்கணித்தால் அதன் வாக்குகளை எளிதாக ஒருங்கிணைக்க முடியும் என்ற கணக்கில் தவெக செயல்படுவதாக தகவல். இதற்காக பாமக தலைவர் அன்புமணியின் மனைவியும், அக்கட்சி எம்.எல்.ஏ.வுமான சவுமியா வாயிலாக அமைச்சர்கள் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோர் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. தவெக தரப்பில், பாமக புறக்கணிப்பு முடிவை நோக்கி நகர்ந்துள்ளதாகவும், பதிலாக வரவுள்ள உள்ளாட்சி தேர்தலில் பாமகவுக்கு உதவுவதாக உறுதி அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.