சவுதி அரேபியாவின் அரசு எண்ணெய் நிறுவனம் ‘அராம்கோ’, வினியோக இடர்பாடுகளை காரணமாகக் காட்டி இந்திய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு எண்ணெய் வழங்குவதை நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் பெரும்பகுதி இறக்குமதியிலேயே பூர்த்தி செய்யப்படுவதால், இத்தகைய தடங்கல் முக்கியமாக பார்க்கப்படுகிறது.
வளைகுடா பகுதியில் ஈரான்–அமெரிக்க படைகள் இடையே நிலவும் மோதல் காரணமாக போக்குவரத்து மற்றும் விநியோகச் சங்கிலி பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சவுதியின் கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாயில் நடந்த ட்ரோன் தாக்குதலுக்குப் பிறகு அந்த வழித்தடத்தில் வினியோகம் தொடர்ந்து மூடப்பட்டிருப்பதால், மேற்கு கடற்கரை துறைமுகங்களுக்கு கச்சா எண்ணெயை கொண்டு செல்லும் வாய்ப்புகள் குறைந்துள்ளன.
இதனுடன் ஹார்முஸ் நீரிணை வழியான கச்சா எண்ணெய் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் மாற்று நாடுகளில் இருந்து கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு ரூ.10,300-ஐ கடந்துள்ளதுடன், டேங்கர் கப்பல்களுக்கான கட்டணமும் உயர்ந்துள்ளது.
மேலும், இந்தியா அதிகம் வாங்கும் ரஷ்ய கச்சா எண்ணெய்க்கான தள்ளுபடி குறைந்ததால் மாற்று கொள்முதலுக்கான செலவு மேலும் அதிகரிக்கலாம் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சவுதி கச்சா எண்ணெய் சந்தையில் முழுமையாக தடைபடவில்லை; ‘அராம்கோ’ சில சரக்குகளை நேரடி சந்தையில் வர்த்தகர்களுக்கு விற்பனை செய்து வருவதாகவும், அவற்றில் சில ஹார்முஸ் வழியாக இந்தியாவை வந்தடைய வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் நீண்டகால ஒப்பந்தங்களைப் போல உறுதியான வினியோகமும் சாதகமான விலையும் இதில் இருக்காது என கூறப்படுகிறது.
அமெரிக்கா–ஈரான் மோதல் தொடங்கியதிலிருந்து இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் சவுதி அரேபியாவின் பங்கு சுமார் 9% ஆக உள்ளது. வினியோக பாதிப்பு நீடித்தால், அதிக செலவில் மாற்று கச்சா எண்ணெயை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டு சுத்திகரிப்பு நிறுவனங்களின் லாபம் குறைய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.





