குடியேற்றம் அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் சர்வதேச மாணவர்களுக்கு கடுமையான புதிய விதிகளை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது. இது அமெரிக்காவில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளைப் போலவே என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை திடீரென உயர்ந்ததால் வீடுகள் பற்றாக்குறை, தினசரி செலவு உயர்வு ஆகியவை அதிகரித்துள்ளதாகவும், கல்வி, சுகாதாரம், பொது போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகளில் கூடுதல் அழுத்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது. கடந்த 12 மாதங்களில் மக்கள் தொகை 1.4% உயர்ந்து 2.79 கோடியை எட்டியுள்ள நிலையில், வெளிநாட்டிலிருந்து குடியேறியோர் 2.92 லட்சம் என கூறப்பட்டுள்ளது.
மக்கள் தொகை மற்றும் குடியேற்றத்தை கட்டுப்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2028க்குள் நிகர வெளிநாட்டு குடியேற்றத்தை 2.25 லட்சமாகக் குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில், சர்வதேச மாணவர்கள் இனி தங்கள் குடும்பத்தினரை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்து வர அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படிப்பை முடித்த பின் அங்கேயே தொடர்ந்து தங்குவதற்காக அதே தரத்தில் அல்லது குறைந்த தரத்தில் மற்றொரு பாடப்பிரிவில் சேர்ந்து விசாவை நீட்டிக்கும் “விசா ஹாப்பிங்” முறைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், பட்டப்படிப்பை முடித்தவர்கள் முதுகலை போன்ற உயர்தகுதிக்குச் செல்ல விரும்பினால், விசா நீட்டிப்புக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





