பெங்களூருவில் இடைத்தரகர் மூலம் ரூ.8 லட்சம் லஞ்சம் பெற்றதாக ஜிஎஸ்டி அதிகாரியை கர்நாடக மாநில லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் தெற்கு கமிஷனரகம் சப் டிவிஷன் 04-ல் ஜிஎஸ்டி கண்காணிப்பாளராக பணியாற்றும் மோகித் பிரதாப் சிங் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இரும்புப் பொருட்கள் வியாபாரத்தில் ஈடுபடும் ஒரு வர்த்தகர் மீது வரி ஏய்ப்பு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான தீர்வு கோரி அவர் அதிகாரியை அணுகியதாக கூறப்படுகிறது.

புகாரின் படி, வழக்கு பொய்யானது என்பதை அறிந்திருந்தும் அதை முடித்து வைக்க ரூ.20 லட்சம் லஞ்சம் கேட்டதாகவும், பின்னர் பேரம் பேசி ரூ.8 லட்சமாக குறைத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த தொகையை இடைத்தரகர் சல்மான் ஷேக்கிடம் வழங்குமாறு வர்த்தகரிடம் அறிவுறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஞ்சம் வழங்க விரும்பாத வர்த்தகர் லோக் ஆயுக்தா போலீசில் புகார் அளித்ததைத் தொடர்ந்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிகாரி மற்றும் இடைத்தரகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. போலீசார் ஆலோசனைப்படி வர்த்தகர் சல்மானிடம் பணத்தை கொடுத்தார்; பின்னர் சல்மான் அந்த பணத்தை அதிகாரியிடம் வழங்கியபோது இருவரும் கையும் களவுமாக கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.