ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், “தர்மம் நமது டிஎன்ஏவில் உள்ளது; அது நமக்கு வழிகாட்டுகிறது” என்று தெரிவித்தார். மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் உரையாற்றினார்.
இன்றைய காலத்தில் இளைஞர்கள் ‘தர்மம்’ குறித்து ஆர்வம் காட்டுவது அரிதாகவே கேட்கப்படும் விஷயமாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார். தர்மம் என்பது முதியவர்களுக்கானது என்றும், பகவத் கீதை, ராமாயணம் போன்ற நூல்கள் ஓய்வு பெற்ற பிறகே படிக்க வேண்டியவை என்றும் பலர் நினைப்பதாகவும் கூறினார்.
அந்த எண்ணம் சரியல்ல என்று வலியுறுத்திய அவர், தர்மம் அனைவரும் கடைப்பிடிக்கக்கூடிய ஒன்று; அதை நம்பாவிட்டாலும் அது இயல்பாகவே செயல்படும் என்றார். உதாரணமாக, சூரியன் உதிப்பதும் மறைவதும் இயற்கையாக உறுதியாக நடைபெறும் நிகழ்வுகள் என அவர் சுட்டிக்காட்டினார்.
மனிதன் அகங்காரத்தால் அனைத்தும் தன் கட்டுப்பாட்டில்தான் இயங்குகிறது என்று கருதி, இயற்கை நிகழ்வுகளும் தன் விருப்பப்படி நடக்க வேண்டும் என்று தவறாக எண்ணுவதாக அவர் கூறினார். உண்மையில் நிலைமை வேறு; தர்மம் மதத்திற்கு மேலானது, மோட்சத்திற்கு வழிவகுக்கும் என்றும் மோகன் பாகவத் தெரிவித்தார்.





