புதுடில்லி: டாக்டர் பரிந்துரை அவசியமான மருந்துகளின் விற்பனை கண்காணிப்பை வலுப்படுத்த, சில்லரை மருந்துக் கடைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மருந்து சீட்டு இல்லாமல் போதைப் பழக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மற்றும் உயிருக்கு ஆபத்தான மருந்துகள் சட்டவிரோதமாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்ததைத் தொடர்ந்து, மருந்துகள் விதிகளில் சட்டத்திருத்தம் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

முன்மொழியப்பட்ட விதிகளின்படி, சில்லரை மருந்துக் கடைகளில் மருந்து சீட்டு மூலம் வழங்கப்படும் மருந்துகள் அனைத்தும் சிசிடிவி கேமராவின் நேரடி கண்காணிப்பு எல்லைக்குள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும். கேமராவில் பதிவாகும் காட்சிகளை கடை உரிமையாளர்கள் தங்களின் கணினி அல்லது பிற சேமிப்பகங்களில் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்.

இந்த பதிவுகளை சுகாதாரத்துறை அதிகாரிகள் தேவையான நேரங்களில் ஆய்வு செய்யும் வகையில் சட்டத்திருத்தம் வழிவகுக்கும் என்றும், இளைஞர்கள் மற்றும் சிறார்களில் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்தவும் மருந்து விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையை உயர்த்தவும் இது உதவும் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.

இந்த விதிமுறை பொதுமக்களுக்கு நேரடியாக மருந்துகளை வழங்கும் சில்லரை மருந்துக் கடைகளுக்கு மட்டுமே பொருந்தும்; மொத்த விற்பனை செய்யும் வினியோகஸ்தர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். சட்டத்திருத்தம் குறித்து பொதுமக்கள் மற்றும் மருந்தக கூட்டமைப்பினர் கருத்துகள், ஆட்சேபனைகள் தெரிவிக்க 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன், பெறப்படும் கருத்துகளை பரிசீலித்த பின் நாடு முழுதும் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.