சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் பகல் நேரத்தில் அடிக்கடி மின் தடை ஏற்படுவதால், கடும் வெயிலில் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

மின் வினியோக சாதனங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நிலையில், காலை முதல் பிற்பகல் வரை மின் தடை செய்யப்படுவது வழக்கம். ஆனால் வெப்பம் அதிகரித்துள்ளதால், பராமரிப்பு காரணமாக மின் தடை செய்ய வேண்டாம் என மின் வாரியம் பொறியாளர்களுக்கு அறிவுறுத்தியதாகவும், பல இடங்களில் அந்த பணிகள் நிறுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும், சென்னையில் மயிலாப்பூர், எழும்பூர், அம்பத்தூர், வியாசர்பாடி, பெரம்பூர் உள்ளிட்ட பகுதிகளில் பகலிலேயே மீண்டும் மீண்டும் நீண்ட நேர மின் தடை ஏற்படுவதாக மக்கள் கூறுகின்றனர். இது குறித்து புகார் அளித்தாலும் நடவடிக்கை இல்லை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வீடுகளில் இருப்பதே கடினமாகி, சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்படுகின்றன. கடந்த வாரத்தில் தமிழகத்தின் தினசரி சராசரி மின் தேவை 21,000 மெகாவாட்டாக இருந்ததாகவும், வார விடுமுறை மற்றும் விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறையால் கடந்த திங்களன்று 17,000 மெகாவாட்டாக குறைந்ததாகவும் கூறப்படுகிறது; பின்னர் பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் தொடங்கியதும் தேவை மீண்டும் உயர்ந்தது.

தற்போது மின் தேவை 20,000 மெகாவாட்டாக உள்ளது. காற்றாலைகளில் இருந்து சுமார் 1,000 மெகாவாட் மட்டுமே கிடைப்பதால், 1,500–2,000 மெகாவாட் அளவில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் இரவு நேர மின் வெட்டு மீண்டும் அமலாகி, மக்கள் தூங்க முடியாமல் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது.