கோவையில் கடந்த மூன்று மாதங்களில் நான்கு கொலை வழக்குகளில் சிறுவர்கள் குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்குகள் தொடர்பாக மாவட்ட சிறார் நீதி பரிபாலன குழுமம் (சிறார் நீதிக்குழுமம்) மேற்கொண்ட ஆய்வின் முடிவில், அவை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

சமீப காலங்களில் பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற கடுமையான குற்றங்களில் 18 வயதுக்கு உட்பட்டோர் ஈடுபடும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். வழக்கமாக, சிறுவர்கள் குற்றங்களில் ஈடுபட்டால் அவர்களை குற்றவாளிகளாக அணுகாமல் நல்வழிப்படுத்தும் நோக்கில் விசாரணை செய்து, கல்வி மற்றும் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் முடிவுகள் எடுக்கப்படுவது வழக்கம்.

ஆனால், சிலர் “சிறுவர்” என்ற போர்வையை சாதகமாக பயன்படுத்தும் நிலை இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் கொடூர குற்றங்களில் வயதை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், சிறுவனின் மனமுதிர்ச்சி, எண்ணம், குற்றம் நடந்தபோது மற்றும் தற்போது உள்ள மனநிலை, குற்றத்தின் விளைவுகளை புரிந்துகொள்ளும் திறன், உடல்-மன வளர்ச்சி, மருத்துவ அறிக்கைகள், சம்பவத்திற்கு முன் நடந்த செயல்பாடுகள் உள்ளிட்ட பல அம்சங்களை விரிவாக ஆய்வு செய்கின்றனர்.

முதன்மை நடுவர் அருண்குமார், உறுப்பினர்கள் ஜெனிபர் புஷ்பலதா மற்றும் சந்திரன் ஆகியோர் அடங்கிய குழுவின் ஆய்வு முடிவின் அடிப்படையில், இந்த நான்கு வழக்குகளும் சிறப்பு நீதிமன்றத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு, கோப்புகள் சட்ட நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளன. சிறார் நீதிக்குழுமம் சிறார்களை எப்போதும் குற்றவாளிகளாக அணுகுவதில்லை என்றும், முழுமையான ஆய்வுக்குப் பிறகே வழக்குகள் மாற்றப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.