தோனி தொடர்ந்த அவதூறு வழக்கில் அவரது வாக்குமூலத்தை வீடியோவில் பதிவு செய்ய கோரிய மனுவை தொடர்பாக, கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி, அக்.9க்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.

ஐ.பி.எல். சூதாட்ட வழக்கைச் சார்ந்த தொலைக்காட்சி விவாதத்தில் தன்னைப் பற்றி அவதூறாக கருத்துகள் கூறப்பட்டதாகக் கூறி, ஐ.பி.எஸ். அதிகாரி சம்பத்குமாருக்கு எதிராக ரூ.100 கோடி மான நஷ்டஈடு கோரி தோனி 2014ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் தோனியின் வாக்குமூலத்தை பதிவு செய்ய வழக்கறிஞர் கமிஷனரை நியமிக்க உயர்நீதிமன்றம் முன்பே உத்தரவிட்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரியான சம்பத்குமார், வாக்குமூலப் பதிவை வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என மனு தாக்கல் செய்தார். மேலும், பதிவை கண்காணிக்க நீதிபதி ஒருவரை நியமிக்கவும், எடிட் செய்யாத வீடியோ நகலை தமக்கு வழங்கவும், மேலும் ஐந்து நட்சத்திர விடுதி அல்லது தனியார் பங்களாக்களில் அல்லாமல் நீதிமன்றம் அல்லது அரசு கட்டடங்களில் வாக்குமூலம் பதிவு செய்யவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரினார்.

இந்த மனு நீதிபதி கோவிந்தராஜன் திலகவதி முன் விசாரணைக்கு வந்தபோது, தோனி அக்.9க்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்தது.