புதுடில்லி: வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை (எப்.சி.ஆர்.ஏ.) திருத்த மசோதாவை ஆய்வு செய்து வரும் பாராளுமன்ற கூட்டுக்குழுவுக்கு, ராஜ்யசபா உறுப்பினர்கள் இருவரை ‘சிறப்பு அழைப்பாளர்கள்’ ஆக லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா நியமித்துள்ளார். இது அரிதான நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

தன்னார்வ அமைப்புகள் பெறும் வெளிநாட்டு நன்கொடைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய சொத்துகளின் நிர்வாகத்தில் புதிய கட்டுப்பாடுகளை விதிக்கும் வகையில் மத்திய அரசு இந்த திருத்த மசோதாவை அறிமுகப்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, மசோதா கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது.

இந்தக் குழுவில் லோக்சபாவிலிருந்து 21 எம்.பி.க்கள், ராஜ்யசபாவிலிருந்து 10 எம்.பி.க்கள் என மொத்தம் 31 பேர் உள்ளனர். பா.ஜ.க. எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையிலான குழுவின் முதல் கூட்டம் நாளை நடைபெற உள்ளது.

இந்நிலையில், ராஜ்யசபா எம்.பி.க்கள் ஜாவேத் அலி கான் மற்றும் ஜேம்ஸ் பங்சங் கோன்யாக் சங்மா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். லோக்சபாவின் முன்னாள் பொதுச்செயலர் ஆச்சாரி கூறுகையில், விதி 299ன் படி குழுவில் உறுப்பினராக இல்லாத எம்.பி.க்கள் ஆலோசனைக் கூட்டங்களில் பங்கேற்கலாம்; மேலும் குறிப்பிட்ட துறைகளில் நிபுணத்துவம் உள்ள எம்.பி.க்களை சிறப்பு அழைப்பாளர்களாக நியமிக்கவும் விதி வழிவகை செய்கிறது. ஆனால் அவர்கள் குழு உறுப்பினர்களைப் போல செயல்பட முடியாது என்றார்.