டாஸ்மாக் முறைகேடு தொடர்பான வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊழல் வழக்கில் கைதான நிலையில் அனுதாபம் தேட முயற்சிக்கிறீர்களா என கேள்வி எழுப்பி கண்டனம் தெரிவித்தது.
இந்த வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி உட்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் செந்தில் பாலாஜி முதல் குற்றவாளியாகவும், ஐ.ஏ.எஸ் அதிகாரி விசாகன் இரண்டாம் குற்றவாளியாகவும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
மேலும் டாஸ்மாக் முன்னாள் மூத்த மண்டல மேலாளர் ராமதுரை முருகன், ஆர். பன்னீர் செல்வம், செந்தில் பாலாஜியின் தனிப்பட்ட உதவியாளர் பாஸ்கர், அவருக்கு நெருக்கமான ரதேஷ் ராஜ் மற்றும் கார்த்திக் ஆகியோர் மீது ஊழல் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பார் டெண்டர், கொள்முதல், ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வசூல், போக்குவரத்து டெண்டர், ஊழியர் நியமனம், பார்ட்டி பண்ட் உள்ளிட்ட பல வழிகளில் நடந்ததாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கரூரை சேர்ந்த கார்த்திக், இரண்டாவது முறையாக ஜாமின் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன் நடந்த விசாரணையில், ஏற்கெனவே 4 நாட்கள் காவலில் வைத்து விசாரித்தும் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை என்பதால் ஜாமின் வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. இதற்கு நீதிபதி மேற்கண்ட கேள்வியை எழுப்பினார். போலீஸ் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கோரப்பட்டதை ஏற்ற நீதிமன்றம், வழக்கை செப்டம்பர் 25க்கு ஒத்திவைத்தது.





