சென்னை மத்திய குற்றப்பிரிவு (CCB) போலீசார், தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் மற்றும் கட்டுமான அனுமதி பெறுவதில் 100 கோடி ரூபாய்க்கு மேல் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் கைப்பற்றிய 118 ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த வழக்கின் தொடர்ச்சியாக, முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் மற்றும் அவரது உதவியாளர்களுடன் தொடர்புடைய இடங்கள் உள்ளிட்ட ஒன்பது இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இதில் சொத்து ஆவணங்கள், வங்கி விவரங்கள், காசோலைகள், 18 மொபைல் போன்கள், 3 மடிக்கணினிகள், 8 பென்டிரைவ்கள், 2 மானிட்டர்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன.

முறைகேடுகள் மூலம் அங்கீகாரம் பெறப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் தனியார் பள்ளிகள் சங்க தலைவர் அரசகுமார், முன்னாள் எம்.எல்.ஏ. முத்துகுமார் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். தொடர்புடைய இடங்கள் மற்றும் வங்கி பரிவர்த்தனைகளும் போலீசாரால் ஆய்வு செய்யப்படுகின்றன.

ஆவணங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆய்வின் மூலம் மகேஷுடன் தொடர்பு இருப்பது தெரிய வந்ததாக கூறிய போலீசார், ஊழல் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், டிஜிட்டல் ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டு பின்னர் நீக்கப்பட்ட தரவுகளை மீட்டெடுக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் கீழ் இயங்கும் மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில், செப்.18 அன்று மகேஷ் விசாரணைக்கு ஆஜராக உள்ளார். கைப்பற்றிய ஆவணங்கள் மற்றும் மீட்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் கேள்விகள் தயாராக உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.