கடந்த 12 ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் 25 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
மோடியின் 76வது பிறந்த நாளை முன்னிட்டு செப்டம்பர் 17 அன்று நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்ற நிலையில், சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சி அலுவலக வளாகத்தில் “ஆசிர்வாத தீபம்” ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் இதை கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ஜவுளி தொழில் வர்த்தகர் நல்லி குப்புசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தீபம் ஏற்றினர்.
குஜராத் முதல்வராக மோடி இருந்த காலத்தில் சபர்மதி நதியைத் தூய்மைப்படுத்தி மக்களுக்கு குடிநீராக வழங்கியதாகவும், நர்மதா அணைக்கட்டு திட்டத்தை செயல்படுத்தி பல கிராமங்களுக்கு தண்ணீர் கிடைக்கச் செய்ததாகவும் எல்.முருகன் குறிப்பிட்டார்.
மேலும், 2047ல் இந்தியா வல்லரசு நாடாக வேண்டும் என்ற முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் கனவை மோடி நிச்சயம் நனவாக்குவார் என்றும், பிரதமர் நீண்ட ஆயுள் வாழ வேண்டும் என்ற வேண்டுதலுடன் ஆசிர்வாத தீபம் ஏற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.





