சென்னை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாகவும் சீராகவும் நிறைவடைந்த நிலையில், அதைத் தாங்க முடியாமல் திமுகவினர் அவதூறு பரப்புவதாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம்சாட்டினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கும்பாபிஷேக விழாவிற்கான பாஸை தாம் யாருக்கும் வழங்கவில்லை என்றும், பாஸ் எந்த நிறம் என்பதே முந்தைய நாள்தான் தமக்கு தெரிய வந்ததாகவும் தெரிவித்தார். மேலும், தமது குடும்பத்தினரும் விழாவிற்கு வரவில்லை என்றார்.

விழாவைச் சுற்றி திமுகவைச் சேர்ந்த சிலர் பிரச்னைகளை கிளப்ப முயன்றதாக கூறிய அமைச்சர், கும்பாபிஷேகம் நல்ல முறையில் நடந்ததால் அதனை ஏற்க முடியாமல் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் தெரிவித்தார்.

மின்சார நிலவரம் குறித்து அவர் பேசுகையில், பல மாநிலங்களில் மின்வெட்டு இருப்பதாகவும், பஞ்சாபில் நீண்ட நேர மின்வெட்டு இருப்பதாகவும் குறிப்பிட்டார். தமிழகத்தில் மின்சார பற்றாக்குறையை சமாளிக்க வெளிச்சந்தையில் இருந்து மின்சாரம் வாங்கி நிர்வகித்து வருவதாகவும், பிற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது நிலைமை கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறினார்.

மேலும், மிசா தொடர்பாக டிடிவி தினகரன் கூறிய கருத்துகளை விமர்சித்த அமைச்சர், தினகரனின் அரசியல் நிலைப்பாடுகள் மாறுபடுவதாகவும், ஜெயலலிதா அவரை நீண்ட காலம் ஒதுக்கி வைத்திருந்ததாகவும் கூறினார்.