கோவை: மாநிலத்தில் மதுபான கொள்முதலில் எந்தவித பாரபட்சமும் இல்லை என்று மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், தி.மு.க. அல்லது அ.தி.மு.க. சார்ந்த ஆலைகள் என்ற வேறுபாடின்றி 11 நிறுவனங்களிடமிருந்து சமமாக கொள்முதல் நடைபெறுகிறது என்றார். கடந்த திராவிட ஆட்சிகளில் இந்தத் துறை சம்பாதிக்க வேண்டுமென்ற நோக்கில் ஊழல் நிறைந்ததாக வைத்திருந்ததாகவும் குற்றம்சாட்டினார்.
டாஸ்மாக் கடைகள் முழுமையாக சரியான நடைமுறைக்கு வந்த பிறகு எப்.எல்.2 கடைகளின் மீது கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் கூறினார். பார்களில் சுகாதாரமற்ற முறையில் உணவு வழங்கப்படுவதாக வந்த புகார்களைத் தொடர்ந்து, விரைவில் வெளியாக உள்ள பார் டெண்டர்களில் உணவகம் நடத்தும் யோசனையும் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்தார்.
மது பாட்டில்களுக்கு கூடுதல் விலை வசூலிக்கும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் வரை டாஸ்மாக் ஊழியர்கள் மீது இடைநீக்கம் நடவடிக்கை தொடரும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், 10 ரூபாய் ஸ்டிக்கர் ஒட்டிய காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தின் கீழ் 4,000 டாஸ்மாக் கடைகளில் ரிவர்ஸ் வெண்டிங் மெஷின் அமைப்பதற்கான டெண்டர் வரும் 5ஆம் தேதி திறக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.





