தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா (JNV) பள்ளிகள் அமைப்பதற்கான நிலங்களை மூன்று மாதங்களுக்குள் அடையாளம் காண தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. இடத் தேர்வு செய்யும் முன் உத்தரவை வாபஸ் பெற முடியாது என்றும், மாநிலத்தின் எதிர்ப்பை குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படும் நவோதயா பள்ளிகளை தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிறுவ வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை அணுகியது. முன்பு நடந்த விசாரணையில், இடத் தேர்வு தொடர்பாக விளக்கம் அளிக்கவும், “தமிழகம் மட்டும் ஏன் திட்டத்தை புறக்கணிக்கிறது?” என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.
நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசிஹ் அமர்வில் நடந்த விசாரணையில், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா, தமிழகம் இருமொழிக் கொள்கையை பின்பற்றும் நிலையில் நவோதயா பள்ளிகளில் மும்மொழிக் கொள்கை நடைமுறையில் இருப்பதாகவும், அதில் ஹிந்தி இடம்பெறுவதால் அரசு எதிர்ப்பதாகவும் வாதிட்டார். இது மாநிலத்தின் கொள்கை வகுக்கும் அதிகாரம் மற்றும் கூட்டாட்சி தத்துவம் தொடர்பானது என்றும், நவோதயா திட்டம் மாநிலங்களுக்கு கட்டாயமல்ல; மேலும் மாநிலத்திற்கு கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
இதற்கு நீதிபதி நாகரத்னா, தமிழகத்தில் ஹிந்தி கற்பிப்பதை முற்றிலும் தவிர்க்க முடியாது எனக் குறிப்பிட்டு, மத்திய அரசின் திட்டங்களை எதிர்க்கும் போக்கு நீடித்தால் நாட்டின் நிலை என்னவாகும் என கேள்வி எழுப்பினார். கூட்டாட்சி தத்துவம் என்பது பரஸ்பர மதிப்பும் ஒத்துழைப்பும் கொண்டதாக இருக்க வேண்டும் என்றும், தமிழகத்தின் கல்வித் தரத்திற்கு கூடுதலாக நவோதயா பள்ளிகள் ஒரு பலமாக அமைய வாய்ப்பு இருப்பதாகவும் அமர்வு தெரிவித்தது.
உடனடியாக நிலம் கையகப்படுத்த உத்தரவிடவில்லை; நிலத்தை தேர்வு செய்ய மட்டுமே கூறுகிறோம் என விளக்கி, மூன்று மாதத்தில் நிலங்களை அடையாளம் காண உத்தரவிட்டது. மத்திய–மாநில அரசுகள் பேசி கருத்து வேறுபாடுகளை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும், நிலத்தை தமிழக அரசு வழங்கினால் மற்ற செலவுகளை மத்திய அரசு ஏற்கும் என முன்பே உறுதியளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட நிலையில், வழக்கு அடுத்த விசாரணைக்காக டிசம்பர் 14-க்கு ஒத்திவைக்கப்பட்டது.





