தமிழகத்தில் நிரப்பப்படாமல் காலியாக இருந்த உயர் சிறப்பு (சூப்பர் ஸ்பெஷாலிட்டி) மருத்துவப் படிப்புகளுக்கான 40 இடங்களை உடனடியாக தமிழக அரசிடம் ஒப்படைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த இடங்களை மாநில அரசு கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழக மருத்துவக் கல்லூரிகளில் உள்ள சில உயர் சிறப்பு இடங்கள் முன்பு அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டிருந்தன. அகில இந்திய அளவிலான கலந்தாய்வு முடிந்த பின்னரும் 40 இடங்கள் நிரப்பப்படாமல் இருந்ததால், அவற்றை மாநில அரசிடம் மீண்டும் ஒப்படைக்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் நடந்த விசாரணையில், தமிழகத்தில் 111 பேர் உயர் சிறப்பு படிப்புக்காக காத்திருப்பதாகவும், காலியிடங்களை நிரப்ப ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றும் மாநில அரசு வாதிட்டது. ஆனால் ‘கட் ஆப்’ குறைத்தால் தரம் பாதிக்கப்படும் என மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அகில இந்திய ஒதுக்கீட்டில் நிரப்பப்படாமல் இருந்த 40 இடங்களையும் தமிழக அரசிடம் உடனடியாக வழங்க வேண்டும் என கூறினர். மேலும், குறைக்கப்பட்ட புதிய ‘கட் ஆப்’ அடிப்படையில் மூன்று வார காலத்திற்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர். காலியிடங்களை நிரப்ப ‘கட் ஆப்’ மதிப்பெண்ணை 30 சதவீதமாக குறைத்த மத்திய அரசின் முடிவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

அரசு மருத்துவர்களுக்கான உயர் சிறப்பு இடங்கள் காலியாக இருந்து வீணாகாமல் தடுக்கும் நடவடிக்கையாக இந்த உத்தரவு பார்க்கப்படுகிறது; இதற்கு பல தரப்பில் வரவேற்பும் தெரிவிக்கப்பட்டுள்ளது.