யமுனை ஆற்றுப்படுகையின் நீர்வளத்தை பாசனம், மின் உற்பத்தி மற்றும் குடிநீர் தேவைகளுக்குப் பயன்படுத்தும் கிஷாவ் பன்முகத் திட்டம், நீண்ட கால தாமதத்துக்குப் பிறகு அடுத்த கட்டத்தை எட்டியுள்ளது.
திட்டத்தை முன்னெடுக்க உத்தர பிரதேசம், உத்தரகண்ட், ஹிமாச்சல பிரதேசம், ராஜஸ்தான், டில்லி மற்றும் ஹரியானா ஆகிய ஆறு மாநிலங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால், சுமார் 97 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களுக்கு பாசன வசதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அணையில் சேமிக்கப்படும் நீர் டில்லி மற்றும் ராஜஸ்தானின் குடிநீர் மற்றும் தொழில் துறை நீர் தேவைகளுக்கும் பயன்படுத்தப்படும்.
அணையில் சேமிக்கப்படும் நீர் யமுனை ஆற்றின் நீரோட்டத்தை அதிகரிக்கவும், ஆற்றை புத்துயிர் பெறச் செய்யும் முயற்சிகளுக்கும் உதவும் வகையில் பயன்படுத்தப்படும் என திட்ட விவரங்களில் கூறப்பட்டுள்ளது.





