பிரதமரின் நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் 2ஆம் கட்டத்தில், தமிழகத்தில் ஏழை மக்களுக்காக 25,000 வீடுகள் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு செயல்படுத்தும் ‘அனைவருக்கும் வீடு’ திட்டத்தின் கீழ், நகர்ப்புற வீட்டுவசதி திட்டத்தின் முதல் கட்டம் நிறைவடைந்த நிலையில், 2024ஆம் ஆண்டு 2ஆம் கட்டம் அறிவிக்கப்பட்டது. இதில் ₹2.50 லட்சம் கோடி மதிப்பீட்டில் ஒரு கோடி வீடுகள் கட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 5,206 நகரங்களில் 71.55 லட்சம் வீடுகள் கட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழகத்தில் 722 நகரங்களில் இந்த 25,000 வீடுகள் கட்டப்பட உள்ளன. ஒவ்வொரு வீடும் சுமார் 300 சதுர அடியில் அமைக்கப்படும். ஒரு வீட்டின் மொத்த செலவில் ₹2.5 லட்சத்தை மத்திய அரசு மானியமாக வழங்கும்; மீதித் தொகையை தமிழக அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.
மேலும், 2ஆம் கட்டத்தில் வழக்கமான முறைகளை விட புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வீடுகள் கட்டுவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.





