அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட வால்கிரீன்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய திறன் மையத்தை சென்னையில் அமைப்பதற்காக, தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கையெழுத்திட்டுள்ளதாக அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முதல்வர் விஜய் முன்னிலையில் வால்கிரீன்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

சென்னையில் புதிதாக அறிவிக்கப்பட்ட ஓஎம்ஆர் ஜிசிசி வழித்தடத்தில் உள்ள டிஎல்எப் டவுன்டவுன், தரமணி வளாகத்தில் இந்த மையம் அமைக்கப்பட உள்ளது.

இதன் மூலம் 250 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என கூறப்பட்டுள்ளது. மேலும், வரும் ஆண்டுகளில் விரிவாக்கத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஒப்பந்தம், நிறுவனத்தின் முதல் உலகளாவிய திறன் மையத்திற்கானதாகும் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.