பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் ஷிப்ரா நதிக்கரையில் ஒரே நேரத்தில் 33.27 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் ‘சேவா சங்கல்ப் அபியான்’, ‘ஆசீர்வாத தீபம்’ என்ற சிறப்பு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

நேற்று மாலை 7 மணிக்கு சைரன் ஒலித்ததும் தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றிணைந்து தீபங்களை ஏற்றத் தொடங்கினர். அடுத்த மூன்று நிமிடங்களுக்குள் நதிக்கரை முழுவதும் ஒளிவெள்ளத்தில் மிளிர்ந்ததாக கூறப்படுகிறது.

ராம் காட், தத்தா அகாரா, கேதாரேஸ்வர் காட், சுன்ஹரி காட், பூகி மாதா காட், மகாகால் மகாலோக் உள்ளிட்ட பல படித்துறைகளிலும் லட்சக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன. தொடர்ந்து ஷிப்ரா நதிக்கு மகா ஆரத்தி எடுக்கப்பட்டது.

கார்த்திக் மேளா திடலில் எரியும் அகல் விளக்குகளை அடுக்கி பிரதமரின் பெரிய உருவப்படத்தையும் தன்னார்வலர்கள் வடிவமைத்தனர். ராம் காட் பகுதியில் நடைபெற்ற பிரதான நிகழ்வை மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ், பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு தொடங்கி வைத்தனர்.

மாநிலம் முழுவதும் 845 முக்கிய இடங்களில் மக்கள் பங்கேற்று ஒரே நாளில் மொத்தம் 3.55 கோடி தீபங்களை ஏற்றியதாக தெரிவிக்கப்பட்டது. ஒரே இடத்தில் 33.27 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டதன் மூலம் அயோத்தியின் முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.