சென்னை: சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டம் தொடர்பாக, அப்பகுதி மீனவர் அமைப்புகளை சந்தித்து பேசி அவர்களின் கருத்துகளை கேட்க முதல்வர் விஜய் முடிவு செய்துள்ளார்.
பட்டினப்பாக்கம் லூப் சாலையில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் புதிய தலைமைச் செயலகம் கட்ட தமிழக அரசு திட்டமிட்டு, அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது. இதற்காக வீட்டுவசதி, வருவாய் துறைகள் மற்றும் சென்னை மாநகராட்சிக்கு சொந்தமான 25.5 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என பல்வேறு மீனவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மேலும், எதிர்க்கட்சிகள் மற்றும் த.வெ.க. (TVK) கூட்டணி கட்சிகளும் இந்த முடிவை கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளன.
தலைமைச் செயலக வட்டாரங்களின் தகவலின்படி, எதிர்ப்பு தெரிவித்து வரும் மீனவர் அமைப்புகளின் பிரதிநிதிகளை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழு இன்னும் ஓரிரு நாளில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. முதல்வர் தலைமையில் நடைபெறும் ஆலோசனைகளுக்குப் பிறகு திட்டம் தொடருமா அல்லது ரத்து செய்யப்படுமா என்பது தெளிவாகும் என கூறப்படுகிறது.





