சென்னை: ஆவின் பால் தட்டுப்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதை உடனடியாக சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

நந்தனத்தில் உள்ள ஆவின் இல்லத்தில் அமைச்சர் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், ஆவின் நிர்வாக இயக்குனர் சிவராசு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனுடன், அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக ஆவினில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 14 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் வழங்கினார்.

கூட்டத்தில் பேசிய அமைச்சர், பால் உற்பத்தியாளர்களுக்கு நிலுவையின்றி மின்னணு சேவைகள் மூலம் பணப்பட்டுவாடா வழங்கப்பட வேண்டும் என்றும், பால் கொள்முதலுக்கான ஊக்கத்தொகை உற்பத்தியாளர்களிடம் சென்றடைவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், பால் கொள்முதல் செய்யப்படும் இடத்திலேயே தரச் சோதனை செய்து, அதற்கான ஒப்புகை சீட்டை வழங்க வேண்டும் என்றார்.

மேலும், கால்நடைகளுக்கான செயற்கை முறை கருவூட்டல் மற்றும் கால்நடை காப்பீடு பணிகளை விரைவுபடுத்தவும், கால்நடை தீவனங்களை தடையின்றி வழங்கவும் அமைச்சர் அறிவுறுத்தினார். பால் கொள்முதல் மற்றும் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்றும், ஆவின் பாலகங்களில் பிற நிறுவனப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் எச்சரித்தார்.