தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், சிக்கிமில் உளவுப்பிரிவு பொறுப்பாளராக பணியாற்றிய தனது ஆரம்பகால அனுபவங்களை வெள்ளிக்கிழமை பகிர்ந்தார். உத்தராகண்டில் நடைபெற்ற ஐஐடி ரூர்க்கி பட்டமளிப்பு விழாவில் அவர் உரையாற்றினார்.

ஐபிஎஸ் அதிகாரியாக பணியில் சேர்ந்த தொடக்க காலத்தில், உளவுத்துறையிலும் புதியவராக இருந்தபோது சிக்கிமில் உளவுப் பொறுப்பு தமக்கு வழங்கப்பட்டதாக தோவல் கூறினார். அந்த நேரத்தில் சிக்கிம் இந்தியாவுடன் முழுமையாக இணையும் பணிகள் நடைபெற்று வந்ததாகவும், அந்த செயல்முறையில் தாமும் ஒரு பகுதியாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், எல்லைப் பகுதிகளை கண்காணிப்பதும், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் நடமாட்டம் குறித்த தகவல்களைச் சேகரிப்பதும் தமது பொறுப்பாக இருந்ததாக கூறினார். ஒரு உளவுப் பணிக்காக அனுப்பப்பட்டவர்கள் சில நாட்களில் திரும்ப வேண்டிய நிலையில், பல நாட்கள் கடந்தும் தகவல் கிடைக்காமல் அவர்களின் நிலை தெரியாத சூழல் உருவானதாகவும், பனிச்சரிவு போன்ற விபத்து நடந்ததற்கான தகவலும் இல்லாததால் கடும் பதற்றம் ஏற்பட்டதாகவும் அவர் விளக்கினார்.

பின்னர் தலைமையகத்திலிருந்து வந்த தகவலில், அந்த குழு சீன ராணுவத்தின் பிடியில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டதாக தோவல் கூறினார். பேச்சுவார்த்தை அல்லது ஏதோ ஒப்பந்தத்தின் பின்னர் அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அவர்கள் மனதளவில் முற்றிலும் உடைந்த நிலையில் மிகவும் மோசமான நிலையில் திரும்பியதாகவும் அவர் தெரிவித்தார். இதையடுத்து விசாரணை நடந்தாலும், தாம் தவறு செய்ததாக கண்டறியப்படவில்லை என்றும், தலைமையகத்திலிருந்து வழங்கப்பட்ட வரைபடங்கள் மற்றும் குறிப்புகளில் இருந்த குறைபாடுகள், தவறுகள் காரணமாகவே அந்த நடவடிக்கையில் சிக்கல் ஏற்பட்டது என்றும் அவர் கூறினார்.

உரையின் முடிவில், கடந்த காலச் சவால்களுடன் ஒப்பிடும்போது இன்றைய தலைமுறைக்கு அதிக வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும், தொழில்நுட்பம் உள்ளிட்ட முன்னேற்றங்கள் சமூக வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்கின்றன என்றும், இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான பல பாதைகள் திறந்துள்ளன என்றும் தோவல் குறிப்பிட்டார்.