திருப்பதி லட்டு நெய் கலப்பட வழக்கில், சுக்ருதி புட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் கைலாஷ் சந்த் மங்களாவை அமலாக்கத்துறை (ஈடி) கைது செய்துள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு (டிடிடி) வழங்கப்பட்ட நெய் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நிலையில் இந்த கைது நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடி கூறுவதன்படி, “அக்மார்க் ஸ்பெஷல் கிரேடு பசு நெய்” என்ற பெயரில் வழங்கப்பட்ட நெய், சுத்திகரிக்கப்பட்ட பாமாயில் மற்றும் பல்வேறு இரசாயனங்களை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. பாம் கெர்னல் ஆயில், பாமோலின் உள்ளிட்டவை மற்றும் எம்ஜி-90, மோனோகிளிசரைடுகள், மைவாசெட் சாப்ட் 400, அசிட்டிக் அமில எஸ்டர் போன்ற சேர்மங்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஈடி தெரிவித்துள்ளது.
2019 முதல் 2024 வரை டிடிடிக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் கலப்பட நெய்யின் மதிப்பு ரூ.230 கோடி என ஈடி கணக்கிட்டுள்ளது.
இந்த சதியில் மங்களா முக்கிய பங்கு வகித்ததாகவும், கலப்படப் பொருட்கள் பெற உதவியதுடன் தனது தொழிற்சாலை வளாகத்தில் கலப்பட நெய் தயாரித்ததாகவும், பல போலி நிறுவனங்கள் மூலம் விநியோகத்தை ஒருங்கிணைத்ததாகவும் ஈடி குற்றம்சாட்டியுள்ளது. நெய் கலப்படம் மூலம் சட்டவிரோத பணப் பரிமாற்றத்திற்கு துணை போனதாகவும் ஈடியின் முக்கிய குற்றச்சாட்டு கூறப்படுகிறது.
மங்களாவிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வழக்கில், போலே பாபா ஆர்கானிக் டெய்ரி மில்க் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் இயக்குநர் விபின் ஜெயினும் இதே போன்ற குற்றச்சாட்டுகளின் பேரில் முன்பே கைது செய்யப்பட்டதாக ஈடி குறிப்பிட்டுள்ளது.





