இந்தியாவில் எப்.சி.ஆர்.ஏ. (வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை சட்டம்) கீழ் பதிவு செய்யப்பட்ட அரசு சாரா அமைப்புகளின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் சுமார் பாதியாக குறைந்துள்ள நிலையில், அவை வெளிநாடுகளிலிருந்து பெறும் மொத்த நிதி உயர்ந்துள்ளதாக டில்லியில் நடைபெற்ற பார்லிமென்ட் கூட்டுக்குழு கூட்டத்தில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

எப்.சி.ஆர்.ஏ. சட்டத் திருத்த மசோதாவை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட கூட்டுக்குழுவின் முதல் கூட்டம் பா.ஜ. லோக்சபா எம்.பி. சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையில் நடைபெற்றது. பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து மசோதா கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த குழுவில் 31 எம்.பி.க்கள் உள்ளனர்.

கூட்டத்தில் பங்கேற்ற மத்திய உள்துறை செயலர் கோவிந்த் மோகன், தற்போது நாட்டில் 14,466 எப்.சி.ஆர்.ஏ. பதிவு பெற்ற அமைப்புகள் உள்ளதாகவும், 2015ல் இந்த எண்ணிக்கை 29,022 ஆக இருந்ததாகவும் தெரிவித்தார். மேலும், 2015-16ல் ரூ.17,832 கோடி இருந்த வெளிநாட்டு நிதி, 2024-25ல் ரூ.22,974 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறினார்.

மாநில அளவில் தமிழகத்தில் அதிகபட்சமாக 2,102 எப்.சி.ஆர்.ஏ. பதிவு அமைப்புகள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 2024-25ல் வெளிநாட்டு நிதி வழங்கிய நாடுகளில் அமெரிக்கா ரூ.12,113 கோடி வழங்கி முதலிடத்தில் இருப்பதாகவும் கூறப்பட்டது.

மேலும், 2024-25ல் மத அமைப்புகள் ரூ.5,150 கோடி பெற்றுள்ளதாகவும், இதில் கிறிஸ்தவ அமைப்புகள் ரூ.1,345 கோடி, ஹிந்து அமைப்புகள் ரூ.328 கோடி, முஸ்லிம் அமைப்புகள் ரூ.19 கோடி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதுவரை 21,983 அமைப்புகளின் எப்.சி.ஆர்.ஏ. பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் உள்துறை செயலர் கூறினார்.