குழந்தைகள் மற்றும் சிறுவர் உணவுப் பொருட்கள் தொடர்பான விதிமீறல்கள் உள்ளதாகக் கூறி, ‘நெஸ்லே இந்தியா’ நிறுவனத்திற்கு எதிராக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.) சட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளது.

குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களின் விற்பனையை ஊக்குவிக்கும் வகையிலான விளம்பரங்கள் மற்றும் பிரசாரங்களுக்கு உணவு பாதுகாப்பு விதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. இதன் கீழ், இவ்வகை விளம்பர நடவடிக்கைகள் கண்காணிக்கப்படுகின்றன. அந்தச் சூழலில், ‘நான் எக்செல்லா புரோ ஸ்டேஜ் 1’, ‘லாக்டோஜென் புரோ 1’ மற்றும் ‘பாலோ அப் பார்முலா’ ஆகிய மூன்று தயாரிப்புகளும் அவற்றின் விளம்பரங்களும் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.

எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தகவலின்படி, ‘நான் எக்செல்லா புரோ ஸ்டேஜ் 1’ விளம்பரத்தில் “5 எச்.எம்.ஓ.க்கள்” மற்றும் “வெய் புரோட்டீன்” தொடர்பான குறிப்புகள் இடம்பெற்றிருந்தன. இதுகுறித்து நிறுவனம் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கேட்கப்பட்டதாகவும், அந்த விளம்பர உள்ளடக்கம் குழந்தைகளுக்கான உணவு விதிமுறைகளுக்கு ஒத்துவரவில்லை என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேபோல், ‘லாக்டோஜென் புரோ 1’ விளம்பரத்தில் “வெய் புரோட்டீன் எளிதில் செரிமானமாகும்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையையும் விளக்குமாறு நெஸ்லே இந்தியாவிடம் எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கேட்டுள்ளது.

மேலும், இணை உணவு சாப்பிடும் குழந்தைகளுக்காக தயாரிக்கப்பட்ட ‘பாலோ அப் பார்முலா’ தயாரிப்பு ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டதில், பயோட்டின் (வைட்டமின் பி7) அளவு நிர்ணயிக்கப்பட்ட தரநிலைக்கு ஏற்ப இல்லை என கண்டறியப்பட்டதாக கூறப்படுகிறது. மறுசோதனையிலும் இது உறுதி செய்யப்பட்டதாக எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. தெரிவித்துள்ளது. இம்மூன்று தயாரிப்புகள் தொடர்பாக மூன்று தனித்தனியான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன; இதில் இரண்டு விளம்பரக் கோரிக்கைகள் தொடர்பானவை, மற்றொன்று ஆய்வகப் பரிசோதனை முடிவை அடிப்படையாகக் கொண்டதாகவும் ஆணையம் கூறியுள்ளது.