முதுமைக் காலத்தில் ஒருவருக்கு தேவையான குடும்ப ஆதரவு கிடைக்காத நிலையை எந்த அளவு பணம் கொடுத்தாலும் ஈடுசெய்ய முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை குடும்ப நல நீதிமன்றம், 80 வயதான தந்தை கோயலுக்கு மாதம் ரூ.75,000 பராமரிப்பு செலவாக வழங்குமாறு மகன் சூரஜுக்கு உத்தரவிட்டிருந்தது. அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி சூரஜ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் விசாரித்தது.

வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி செய்து வந்த கோயல், தன் வீட்டை மகனுக்கு எழுதிக் கொடுத்த பிறகு தன்னை கவனிக்காமல் விட்டதாக கூறி பராமரிப்பு செலவு கோரி குடும்ப நல நீதிமன்றத்தை அணுகியிருந்தார்.

இந்த நிலையில், பிற சொத்துகளிலிருந்து கிடைக்கும் வாடகை வருவாயை கோயல் மறைத்ததாகக் கூறி, பராமரிப்பு செலவு பெற அவருக்கு உரிமை இல்லை என நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவை அவர் ரத்து செய்தார்.

அதே நேரத்தில், தந்தை–மகன் இடையிலான பிரச்னைகள் தீர்ந்து சுமூக உறவு உருவாகும் என நீதிபதி நம்பிக்கை தெரிவித்தார்.