நில மோசடி தொடர்பான பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் செப்.21 அன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று ராஞ்சியில் உள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பர்காயின் பகுதியில் 8.86 ஏக்கர் பழங்குடியினர் நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் சட்டவிரோதமாக வாங்கியதாகவும், அதனுடன் தொடர்புடைய நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் ஹேமந்த் சோரன் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அவர் 2024 ஜன.31 அன்று கைது செய்யப்பட்டதாகவும், அதே நாளில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்னர் 2024 ஜூன்.28 அன்று ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கவும், விசாரணைக்கு தடை விதிக்கவும் அவர் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததாகவும் கூறப்படுகிறது.

செப்.19 அன்று அமலாக்கத்துறை விசாரிக்கும் பணமோசடி வழக்கில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட இருந்த நிலையில், அவரது தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் ஆஜராகி, பணிச்சுமை காரணமாக ஹேமந்த் சோரன் நேரில் வரவில்லை; தேதி மாற்ற வேண்டும் என கோரினார்.

இதனை பரிசீலித்த நீதிமன்றம், செப்.21 மாலை 4 மணிக்கு ராஞ்சியில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட (PMLA) சிறப்பு நீதிமன்றத்தில் ஹேமந்த் சோரன் நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டது.