2027 ஆஸ்கர் விருதுகளுக்கான சர்வதேச திரைப்படப் பிரிவில் இளையராஜாவின் இசை இன்னொரு படத்தின் மூலம் இடம்பிடிக்கிறது. இந்தியா சார்பில் மராட்டிய படம் கோந்தல் ஆஸ்கர் போட்டிக்கு செல்கிறது என சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில், அதே இசையமைப்பாளரின் இன்னொரு படமும் இந்தப் போட்டியில் இணைந்துள்ளது.

அந்த படம் அந்தோனி. இந்தப் படத்தை இலங்கை அரசு சார்பில் 2027 ஆஸ்கர் சர்வதேச திரைப்படப் பிரிவுக்காக அனுப்பி வைக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

படக்குழு வெளியிட்ட தகவலின்படி, இளையராஜாவின் இசையில் உருவான இலங்கை (ஈழத்து) தமிழ்த் திரைப்படமாக அந்தோனி வரலாற்றில் முதல்முறையாக ஆஸ்கர் நோக்கி பயணிக்கிறது. மேலும், படம் மூன்று மொழிகளில் உருவாக்கப்பட்டு அண்மையில் உலகமெங்கும் வெளியானதாகவும் தெரிவித்துள்ளனர்.

கயல் வின்சன்ட், டிஜே பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தை சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கியுள்ளனர்.

இதே ஆண்டில் இளையராஜா இசையமைத்த இரண்டு படங்கள் ஆஸ்கர் ரேஸில் இடம்பிடிப்பது தமிழ் சினிமா வரலாற்றில் சாதனையாக பார்க்கப்படுகிறது. மேலும், கமல்ஹாசன்–இளையராஜா கூட்டணியில் வந்த தேவர் மகன், ஹே ராம் ஆகிய படங்களும் முன்பு ஆஸ்கர் போட்டியில் கலந்து கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.