பள்ளி மாணவர்களுக்கு சூடாகவும் சுவையாகவும், உரிய அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த காலை உணவு வழங்கப்பட வேண்டும் என்று முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். விரிவாக்கப்பட்ட திட்டத்திற்கு “காமராஜர் காலை உணவு திட்டம்” என்று பெயரிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை செயல்பட்ட காலை உணவு திட்டத்தை, தற்போது 6 முதல் 8ம் வகுப்பு வரை விரிவாக்க தமிழக வெற்றிக்கழக அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 6–8ம் வகுப்புகளில் படிக்கும் சுமார் 15.30 லட்சம் மாணவர்கள் பயன்பெற உள்ளனர்.

இந்த விரிவாக்கத்திற்காக நடப்பு நிதியாண்டில் கூடுதலாக 217 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்த காலை உணவு திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு 724 கோடி ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திட்ட செயல்பாட்டை குறித்து தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் விஜய் ஆய்வு செய்தார். சமையல் கூடங்கள் மற்றும் உணவு பரிமாறும் இடங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்கப்பட வேண்டும்; அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேலும், திட்டத்தில் ஈடுபடும் அனைத்து துறை அலுவலர்களும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளை ஒருங்கிணைந்து முறையாக நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.