கிருஷ்ணகிரி அருகே ஆர்.பூசாரிப்பட்டி டாஸ்மாக் கடை அருகே ஏற்பட்ட தகராறில், தனியார் வேளாண் நிறுவனத்தில் பணியாற்றிய ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி நஞ்சநாடு பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (33) கிருஷ்ணகிரியில் தனியார் வேளாண நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று இரவு அவர் நண்பர்களுடன் டாஸ்மாக் அருகேயுள்ள கடை அருகில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது.

காலி பாட்டிலை திருப்பி கொடுத்து ரூ.10 பெறச் சென்றபோது கடையில் இருந்த கார்த்திக் (24) மற்றும் அவரது தந்தை கோவிந்தராஜ் (48) ஆகியோர் அருண்குமாரை தாக்கியதாக போலீசார் கூறினர்.

பின்னர் கார்த்திக், டாஸ்மாக் கடையிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரம் சென்ற அருண்குமாரை கல்லால் தாக்கி கொன்றதாக தெரிவிக்கப்பட்டது. சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதே டாஸ்மாக் அருகே சில ஆண்டுகளுக்கு முன்பும் மதுபோதை தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகிறது.