மதுரையில் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் (சிஏடி) கிளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தாக்கலான மனுவில், மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
எம்.பி.ஏ. வழக்கறிஞர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடேசன் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் மத்திய அரசுத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களைச் சார்ந்த சஸ்பெண்ட், பணி நீக்கம் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பான வழக்குகள் தற்போது சென்னையில் உள்ள சிஏடியில் விசாரிக்கப்படுகின்றன என குறிப்பிடப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களைச் சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் சென்னைக்கு சென்று வருவதில் சிரமம் ஏற்படுவதுடன், செலவும் கால விரயமும் அதிகரிக்கிறது என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது. தென் மாவட்டங்கள் பயனடையும் வகையில் மதுரையில் உயர்நீதிமன்றக் கிளை இயங்குவது போல, சிஏடியின் கிளையும் மதுரையில் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மனு அனுப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி சி.வி. கார்த்திகேயன் அமர்வு, மதுரையில் சிஏடி கிளை அமைப்பது குறித்து மத்திய சட்டத்துறை செயலரும் சிஏடி தலைவரும் தெளிவான நிலைப்பாட்டை அக்டோபர் 16-க்குள் பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.





