கடந்த 12 ஆண்டுகளில் சுற்றுச்சூழல் தொடர்பான பல துறைகளில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார். புதுடில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் இதை கூறினார்.
அந்நிகழ்ச்சியில் தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) தொடர்பான மொபைல் செயலியை பிரதமர் தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழல் வழக்குகளின் நிலை, தீர்ப்பாயத்தின் வழக்குப் பட்டியல் உள்ளிட்ட விவரங்களை வக்கீல்கள் மற்றும் பொதுமக்கள் எளிதாக அறிய இந்த செயலி உதவும் என தெரிவிக்கப்பட்டது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவின் உறுதிப்பாட்டை காட்டும் நடவடிக்கைகளாக ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கிற்கு விதிக்கப்பட்ட தடை, மெட்ரோ ரயில் விரிவாக்கம் மற்றும் உயிரி எரிபொருள் கூட்டமைப்பு போன்றவற்றை அவர் குறிப்பிட்டார்.
நகர்ப்புற போக்குவரத்து மாற்றங்களை சுட்டிக்காட்டிய அவர், 2014க்கு முன்பு ஐந்து நகரங்களில் மட்டுமே மெட்ரோ சேவை இருந்ததாகவும், மொத்த நீளம் 250 கி.மீ.க்கும் குறைவாக இருந்ததாகவும் கூறினார்.
மேலும், நாட்டின் வளர்ச்சி வேகமாகவும் அதே நேரத்தில் நிலையானதாகவும் இருப்பதாக கூறிய அவர், நீர் சேமிப்பு துறையில் முன்னெப்போதும் இல்லாத பணிகள் நடைபெறுவதாகவும், நாடு முழுவதும் 1.5 கோடி நீர் சேகரிப்பு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.





