மேற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை முன்வைத்து, பாகிஸ்தான் எரிபொருள் சேமிப்பு நோக்கில் சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.

ஈரான்–அமெரிக்கா மோதல் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தி தொடர்பான நிலைமை, மேலும் ஈரான் ஆதரவு பெற்ற ஹவுதி பயங்கரவாதிகள் மற்றும் சவுதி அரேபியா இடையேயான மோதலால் செங்கடல் பகுதியில் உள்ள பாப் எல்-மாண்டேப் ஜலசந்தி தொடர்பான பாதிப்புகள் ஆகியவை கச்சா எண்ணெய் ஏற்றுமதியை பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு வாகனங்களை வாங்குவதற்கு முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், அரசு வாகனங்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 50 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.

மேலும், திருமண நிகழ்ச்சிகளில் ஒரே ஒரு உணவு வகை மட்டுமே பரிமாற வேண்டும்; அரசு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு பயணம் செய்ய தடை உள்ளிட்ட கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

வணிக வளாகங்கள் இரவு 10 மணிக்குள், உணவகங்கள் இரவு 11 மணிக்குள் மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகள் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.